2022 புது வருஷம் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
நாம் இப்போது 2021 ஆம் ஆண்டில் இறுதியில் இருக்கின்றோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தினால் அனைவரது வாழ்க்கையுமே பெரும் சிரமங்களையும், கஷ்டங்களையும் சந்தித்து போராட்ட களமாக அமைந்தது. வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு நம் அனைவரும் புதிய விடியலையும், உத்வேகத்தையும் கொடுக்கும் விதமாக அமைந்திட வேண்டுமென்பதே அனைவரது விருப்பம். வரவிருக்கும் புத்தாண்டு உங்களது ராசிக்கு எத்தகைய பலனை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியெனில், வேத ஜோதிடத்தின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்குமான புத்தாண்டு பலனை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், செவ்வாய் தனுசு ராசிக்குள் நுழைவதால் நிதி நிலையில் சாதகமாக மாற்றம் ஏற்படும். இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரக்கூடும். ஏப்ரல் 13ம் தேதி வியாழன் அதன் சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரிப்பது உங்கள் கல்வி முயற்சிகளில் வெற்றிபெற உதவும். சனி உங்கள் பத்தாம் வீட்டில் இருப்பதால், வெற்றியைப் பெற முன்பை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செவ்வாய் மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் வரை மீனத்தில் சஞ்சரிப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். எனவே, நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், நீங்கள் உண்ணும் உணவில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். செவ்வாய் உங்கள் சொந்த ராசியில் இருப்பது குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சராசரி பலன்களை பெறுவார்கள். தனுசு ராசியில் ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியாவதால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் துறையில் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் தொழில் வாழ்க்கை புதிய திசையில் நகர தொடங்கும். மேலும், சனி பத்தாம் வீட்டில் இருப்பதால், பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். 2022 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உங்கள் நிதி நிலைமைகளில் பல ஏற்ற தாழ்வுகள் காணப்படும். ஏப்ரல் மாதம் உங்கள் ராசியிலிருந்து மீனத்தில் குரு சஞ்சரிப்பதால், உங்களுக்கு வீண் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். மேலும், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். 2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களான, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் உங்கள் குழந்தைகளுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

மிதுனம்
2022ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு பல சவால்களும், வாய்ப்புகளும் தேடி வரப்போகின்றன. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை எட்டாவது வீட்டில் சனி இருப்பதால் நிதி இழப்பு மற்றும் உடல்நல கோளாறுகள் மற்றும் துன்பங்களை சந்திக்க நேரிடும். மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு சோதனைக் காலமாகவே அமையும். பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் வரை, நீங்கள் அசிடிட்டி, மூட்டு வலி, சளி, இருமல் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். இருப்பினும், ஏப்ரல் நடுப்பகுதிக்குப் பிறகு 11வது வீட்டில் ராகு சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். மாணவர்கள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் கல்வி சார்ந்த விஷயங்களில் விரும்பிய முடிவுகளை அடைவார்கள். இருப்பினும், ஏப்ரல் 27 க்குப் பிறகு, உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சனி இருப்பதால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றியைப் பெற காத்திருக்க வேண்டியிருக்கும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் செவ்வாய் 10, 11 மற்றும் 12ம் வீட்டில் சஞ்சரிப்பதன் விளைவாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.

கடகம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 7வது வீட்டில் சனி இருப்பது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உங்களின் தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்து, பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம். உங்கள் தாயாருக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அவரது உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் இறுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை கும்ப ராசியில் சனி இருப்பது உங்கள் நிதி நிலையை பெரிதும் பாதிக்கும். அதன் பிறகு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் நல்ல பலனளிக்கும். ஏப்ரல் நடுப்பகுதியில் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் குரு பெயர்ச்சியான பிறகு நிலைமைகள் மேம்படும். மேஷத்தில் ராகுவின் பெயர்ச்சி பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். செப்டம்பர் வரை வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்ட உதவும். ஜூன்-ஜூலை மாதங்களுக்கு இடையே, செவ்வாய் மேஷத்தில் நுழைவதன் விளைவாக உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட முடியும்.

சிம்மம்
ஆண்டின் தொடக்கத்தில் ராசி அதிபதி சூரியன் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிதி நிலைமைகள் மேம்படும். ஜனவரி மாத இறுதி முதல் மார்ச் வரை செவ்வாயின் பெயர்ச்சி உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்தும். பிப்ரவரி 26 அன்று உங்கள் ராசியிலிருந்து செவ்வாய் ஆறாவது வீடான அதிர்ஷ்டத்தின் வீட்டைப் பார்க்கும்போது உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். இருப்பினும், பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கங்கள் சாதகமற்றதாக மாறும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் எதிர்பாராத நிகழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஏப்ரல் 12ஆம் தேதி மேஷ ராசியில் ராகு பெயர்வதால் சில உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். எனவே கவனமாக இருங்கள். ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் வரை மீனத்தில் குரு 5வது வீட்டை பார்க்கும் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது. இதன் விளைவாக, மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் விரும்பிய வெற்றியைப் பெறுவார்கள். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12 க்குப் பிறகு மேஷத்தில் ராகு சஞ்சரிப்பது, உயர் அதிகாரிகளுடனும் முதலாளியுடனும் நல்ல தொழில்முறை உறவை ஏற்படுத்தலாம். இது வேலையில் உங்கள் நற்பெயரை அதிகரித்து பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். ஏப்ரல் மற்றும் செப்டம்பருக்கு இடையில், திருமணமான தம்பதிகள் தங்கள் துன்பங்களை நீக்கி, தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட திட்டமிடலாம். ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் வரை ரிஷப ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது அதிர்ஷ்டத்தைப் பெற உதவும்.

கன்னி
ஜனவரி மாதத்தில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும் செல்வ செழிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், உடல்நிலை சரியில்லாமல் போகலாம். ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சாதகமற்றதாகத் தெரிகிறது. பிப்ரவரி 26 முதல் மகரத்தில் செவ்வாய் 5ம் வீட்டில் சஞ்சரிப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு கல்வியில் நல்ல முடிவுகளை ஏற்படுத்தும். மார்ச் மாத தொடக்கத்தில், 5ம் வீட்டில் சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாதகமான நிதி நிலைமைகளைக் குறிக்கிறது. புதிய வருமான ஆதாரங்களைத் தரும். ஏப்ரல்-இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை, சனி 6வது வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளிநாடு சென்று கல்வியைத் தொடர விரும்பும் கன்னி ராசி மாணவர்களுக்கு செப்டம்பர் மற்றும் டிசம்பர் இறுதிக்கு இடைப்பட்ட காலம் மிகவும் சாதகமாக இருக்கும். புதன் துலாம் ராசியில்சஞ்சரித்து, நவம்பர் நடுப்பகுதி வரை தங்கியிருப்பதால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இடையிலான உறவு வலுவடைய தொடங்கும்.

துலாம்
வேத ஜோதிடத்தின்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டின் தொடக்கம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சாதகமான பலன்களைத் தரும். ஜனவரி நடுப்பகுதியில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சாதகமான நிதி முடிவுகளையும், லாபத்தையும் உண்டாகும். மார்ச் மாத தொடக்கத்தில் சதுர் கிரஹ யோகம் அமைவதால் பொருளாதார வெற்றியும் சீரான பண வரவும் உண்டாகும். துலாம் ராசி மாணவர்களைப் பற்றி பேசினால், ஏப்ரல் மாதத்தில் குரு மீனத்தில் சஞ்சரிப்பது கல்வித் துறையில் நம்பிக்கைக்குரிய பலனைத் தரும். வேலை அல்லது கல்வி தொடர்பான உங்களது அனைத்து கனவும் மே மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் நிறைவேறும். பிப்ரவரி 26 அன்று உங்கள் ராசியின் 4ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல பலன்கள் உண்டாகும். ராகு ஏப்ரல் மாதத்தில் 7வது வீட்டில் இருப்பது காதலர்கள் மற்றும் திருமணமானவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் அக்டோபர் முதல் நவம்பர் மாதத்திற்குள் உங்கள் திருமணம் கைக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கலவையான பலன்கள் நிறைந்ததாக இருக்கும். 2022 தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேவையற்ற செலவுகள் இருக்கும். ஏப்ரல் மாத இறுதியில், கும்ப ராசியில் சனி பெயர்ச்சியாவது உங்கள் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் கலவையான முடிவுகளைத் தரும். ஏப்ரல் நடுப்பகுதியில் உங்கள் நிதி நிலைமைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்படக்கூடும். ஏப்ரல் 12-ம் தேதி இடம் பெயர்வது ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இருப்பினும், தேவையற்ற மன அழுத்தத்தால் உங்கள் வாழ்க்கையின் மற்ற அம்சங்களும் பாதிக்கலாம். சாதகமான கிரக நிலைகளின் விளைவாக மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். செப்டெம்பர் மாதத்தில் பெரிய லாபம் மற்றும் நல்ல தொகையைப் பெறுவதில் வெற்றிபெற உதவும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், உங்கள் தாயின் உடல்நலம் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4வது வீட்டில் சனி சஞ்சரிப்பதால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே சிறிய பிரச்சனைகளில் சிறு சிறு வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை விடுத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பது உசிதம். 11ம் வீட்டில் சுக்கிரன் பலவீனமான நிலையில் இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் நல்ல நேரத்தை செலவிடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு
2022ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி நிலை அடிப்படையில் மிக சாதகமானதாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரித்து, உங்கள் நிதி நிலைமைகளை வலுப்படுத்த உதவிடும். கல்வியைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பிப்ரவரி முதல் ஜூன் வரை உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மனக் கவலைகள் மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படுவதுடன், குடும்ப வாழ்க்கையில் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். உங்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், ஜனவரியில் மகர ராசியில் சூரியன் சனியுடன் இணைவது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிரச்சனைகள் மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்தும். எனவே, உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஜூன் முதல் ஜூலை 20 வரை உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காணப்படும். இதன் விளைவாக 2022 இன் இறுதியில் குரு 4வது வீட்டில் இருப்பதால் நீங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையைப் பற்றி பேசினால், நவம்பர் முதல் புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் சுக்கிரன் 6ல் சஞ்சரிப்பதால், அக்டோபர் வரை சில பெரிய நோய்களின் பிடியில் சிக்கக்கூடும்.

மகரம்
இந்த புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சனி தனது சொந்த ராசியில் இருப்பது உங்கள் தொழில், நிதி மற்றும் கல்வித்துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் பல்வேறு சவால்களைக் கொண்டுவரக்கூடும். நிதி நிலையைப் பற்றி பேசுகையில், உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பண வரவில் தடைகள் ஏற்படலாம். இருப்பினும், வணிகர்களுக்கு, செப்டம்பர் முதல் ஆண்டு இறுதி வரையிலான காலக்கட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உணவில் கவனம் செலுத்தி, தினமும் யோகா செய்யுங்கள். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை புறக்கணிக்காதீர்கள். மாணவர்களுக்கு, ஜனவரி மாதத்தில் கூடுதல் கடின உழைப்பும் முயற்சியும் தேவை. விருச்சிக ராசியில் கேது சஞ்சாரிப்பது இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணவும், சிறிய விஷயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கைப் பற்றி பேசுகையில் இந்த காலக்கட்டம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் குரு சஞ்சாரத்தால் சாதகமான பலன்களைத் தரும். திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், ஆகஸ்ட் முதல், உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக மாறும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பணம் மேற்கொள்ள திட்டமிடலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பெரும்பாலும் சாதகமானதாகவே இருக்கும். நிதி ரீதியாக, இந்த ஆண்டு நன்றாக இருக்கும். ஜனவரி மாதத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது உங்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மை தரும். மார்ச் மாத தொடக்கத்தில் சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களின் சேர்க்கை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறவும், நல்ல செல்வத்தைப் பெறவும் உதவும். இருப்பினும், ஏப்ரல் 12 ஆம் தேதி மேஷத்தில் ராகுவின் சஞ்சாரம் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கலாம். இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எதுவும் உங்களை பாதித்திட அனுமதிக்கக்கூடாது. இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் ஜனவரி மாதத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். ஏப்ரல் மாதத்தில் ராகு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், உங்கள் உடன்பிறந்தவர்கள் உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், ஜனவரி மாதத்தில் வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் பெரும் வெற்றியை ஏற்படுத்தும். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை உங்கள் உயர் அதிகாரிகளுடனும் முதலாளியுடனும் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் லாபகரமாக அமையும். இருப்பினும், எதிர்காலத்தில் இனிமையான வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்ப நாட்களில் நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு, 2022 ஆம் ஆண்டு கலவையாக இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்ப நாட்களில் உங்களுக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசியில் குரு சஞ்சரிப்பதன் விளைவாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். ஏப்ரல் மாதம் 12ம் வீட்டில் சனி அமர்வதால் புதிய வருமானம் கைக்கூடும். ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கிரக நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், உங்கள் நிதி நிலையில் பல ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். உத்தியோக ரீதியாக, மீன ராசிக்காரர்கள் விரும்பிய பலனைக் காண்பார்கள். ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் குரு சஞ்சாரம் செய்வது சக ஊழியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த உதவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் தேர்வில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 12ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், உங்கள் குடும்பத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்லலாம். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உங்கள் தாயின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை மற்றும் குரு பெயர்ச்சியின் காரணமாக குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மார்ச் வரை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சிறிய விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.